திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 31 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 12 நாள் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் வீதியுலா நடக்கிறது. 4 ம் நாள் விழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் நடைபெற்றது.

முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வொரு ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார். சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தது. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது.இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார்.

ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார். அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப் பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இப்படி நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி என பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. திருநெல்வேலி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்த விழா நெல்லையப்பர் கோயில் தைப்பூசத் திருவிழாவின் 4 வது நாள் இந்த நிகழ்ச்சி நெல்லுக்கு வேலியிட்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இதை நினைவுபடுத்தும் வகையில், சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் திருவிளையாடல் வைபவம் இன்று பிற்பகல் சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்தி ரதவீதி உலா நடைபெறுகிறது. வரும் 09 ம் தேதி கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப் பூச மண்டபத்தில் தீர்த்தவாரியும், 10 ம் தேதி நடராஜர் திருநடனக் காட்சியும், 11 ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.



மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்



© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top