திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி, திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் ஆகியவை பிரசித்திபெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றது.இவற்றில் ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கும் இன்று கும்பாபிஷேகவிழா வெகு விமரிசையாக நடைபெற்று உள்ளது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த சமயபுரம் மாரியம்மன் முற்காலத்தில் 'வைஷ்ணவி' என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அங்கிருந்த இந்த அம்மனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்ற சிலர், கண்ணனூர் என்ற இடத்தில் அம்மனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.அவ்வாறு சிலை வைக்கப்பட்ட கண்ணனூர்தான் இன்றைய சமயபுரம் என்றும், அந்த அம்மன்தான் இன்றைய சமயபுரத்தம்மன் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், கண்ணனூர் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாரியம்மனை வழிபட்டார்.போரில் வெற்றிபெற்றால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக்கொண்டார். அதன்படி, போரில் ஏற்பட்ட வெற்றியை அடுத்து மாரியம்மனுக்கு கோவில் எழுப்பினார். தற்போதுள்ள கோவில் கி.பி.1804-ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும்.

தற்போதுள்ள கோவில், பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சமயபுரம் கோவிலின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்.அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். சமயபுரத்து மாரியம்மனின் விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் இதற்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இந்த கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்து சமய ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். அதையொட்டியும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் நலன் கருதி கோவிலில் விரிவாக்க பணிகள் மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அரசு நிதி மற்றும் பக்தர்கள் நன்கொடை சேர்த்து ரூ.30 கோடி செலவில் கடந்த 2011ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக அனைத்து பிரகாரங்கள், முன்புற மண்டபங்கள் விரிவு படுத்தப்பட்டன. மேலும் வடக்கு, தெற்கு கோபுரங்களுக்கு புதிய வாசல்கள் அமைக்கப்பட்டன. மேலும் அம்மனின் திருமேனி வர்ண கலாபம் செய்யப்பட்டது. விநாயகர் சன்னதி இடமாற்றம் செய்யப்பட்டு கன்னி மூலையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மாரியம்மன் மூலஸ்தானம் பாலாலயம் செய்யப்பட்டு கருவறையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து பிப்ரவரி 6-ந்தேதி (இன்று) சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கோவில் வாசலில் 17 வேதிகைகள் மற்றும் 51 யாக குண்டங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு முதல் கால யாக சாலை பூஜைகள் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. அடுத்த நாள் காலை மற்றும் மாலை வேளைகளில் 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் சிவாச் சாரியார்களால் நடத்தப்பட்டது. நேற்று காலை 4, 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

இன்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி த்ரவ்யா ஹூதி, 5.30 மணிக்கு பரி வார பூர்ணாஹூதி, 5.45 மணிக்கு பிரதானம் பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு யாத்ரா தானம் கடங்கள் புறப்பட்டன. சரியாக காலை 7.10 மணிக்கு மாரியம்மன் கோவில் தங்க விமானம், நூதன ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார விமானங்கள், மூலவர், மேற்கு, வடக்கு, தெற்கு வாசல் கோபுரங்கள், விநாயகர், உற்சவர் அம்பாள் சன்னதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்பரங்குன்றம் சிவஸ்ரீ ராஜாபட்டர், திருவானைக்காவல் சந்திரசேகர சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தி தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து பைப் மூலம் பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top