ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். இன்றளவும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன. அது போல மாசியில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது.

அதுபோல சித்திரை தேரோட்டத்தின் போது சமயபுரம் மாரியம்மனுக்கான சீர்வரிசைகள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்– அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இருந்து வருகிறது. அம்மா சமயபுரத்தாளின் பேரழகு ததும்பும் அந்த செந்தூர முகத்தை கண்டாலே நம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும். ஆலயக் கருவறையில் சமயபுரம் மாரியம்மனின் வலது திருப்பாதம், மாயாசூரனின் தலைமீது பதிந்துள்ளதைக் காணலாம். மாரியம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசூரனின் தலைமீது பதித்துள்ளாள்.

இங்கு இரண்டு தீர்த்த குளங்கள் உண்டு. ஒன்று பெருவளை வாய்க்கால் தீர்த்தம், மற்றொன்று மாரி தீர்த்தம். இத்தல அம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. வேப்ப மரம்தான் இங்கு தல விருட்சம். உற்சவர் அம்மனின் திருநாமம் ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்பதாகும். கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இத்தலத்தை காவல் புரிகிறார். இந்த கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தேரோட்டம் நடைபெறும். அப்போது அடியவர்கள் அலகு குத்தி, மொட்டையடித்து, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, அங்க பிரதட்சயண்யம் செய்து வணங்கினால் நல்லது மட்டுமே நடக்கும் என்று நம்பிக்கை. அப்பேர்ப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பச்சை பட்டினிவிரதம் கடந்த மார்ச் 12ம் தேதி முதல் கடந்த 9ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து கடந்த 9ம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அன்றைய இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் அருள்பாலித்து வந்தார். முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று (18ம் தேதி) நடைபெற்றது. காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுனார். இதனையடுத்து காலை 10.31 மணி முதல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் வைபவம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

தொடர்ந்து நாளை 19-ந் தேதி இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 20-ந் தேதி இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார். 21-ந் தேதி மதியம் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைந்து, மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் கண்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top