சைவ சமய ஆலயங்களில் பெரிய ஆலயமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்குரியதாகவும், சமயக்குரவர்கள் நால்வரால் தொடங்கி வாழையடி வாழையாக வந்த சைவத் திருக்கூட்ட மரபினர் அனைவரும் போற்றி, பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலாகும். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் மூலவராக வன்மீக நாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.

இக்கோயிலின் ஆழித் தேரானது ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தேர்களில் திருமுறையில் பாடப்பெற்ற பெருமை இத்திருக்கோயிலின் தேருக்கு மட்டுமே உள்ளது. இதர திருக்கோயில்களின் தேர்களிலிருந்து இத்தேர் முற்றிலும் மாறுபட்டது. 31 அடி உயரம் கொண்ட இத்தேர் கட்டுமானத்தில் இரண்டு இரும்பு அச்சுகளில், 9 அடி விட்டமும், ஒன்றரை அடி அகலமும் உடைய நான்கு இரும்பு சக்கரங்களின் மேல், அருமையான சிற்பங்களுடன் அமைந்துள்ளது. எண்கோண வடிவமாக அமைந்துள்ள இத்தேர் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் 20 பட்டைகளாகக் காணப்படும். அலங்கரிக்கப்பட்ட இத்தேரின் உயரம் 96 அடி. அலங்கரிக்கப்பட்ட பின்னர் இத்தேரின் எடை 350 டன் இருக்கும்.

தேரின் முன்புறம், தேரினை இழுத்துச் செல்வது போல் பாயும் அமைப்பில் நான்கு குதிரைகள் உள்ளன. 32 அடி நீளம், 11 அடி உயரம் உடைய குதிரைகள் தமிழர்களின் கலை நயத்தைப் பறைசாற்றும் வகையில் உள்ளன. பிரசித்தி பெற்ற இந்த ஆழித்தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதிநாயனார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் போன்ற 63 நாயன்மார்களின் கதைச் சிற்பங்களும், பெரியபுராணம் மற்றும் சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராணக் காட்சிகளும் மரத்தில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பங்களாகத் தேரின் அடிப்பாகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்பேர் பட்ட திருவாரூர் ஆழித் தேராட்டம் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் காமராஜ், கலெக்டர் நிர்மல் ராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேர் நகர தொடங்கியதும் பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என் பக்தி முழக்கம் எழுப்பினர். தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரானது கீழ வீதி, மேல வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக இன்று மாலை 5 மணிக்கு நிலைக்கு வருகிறது. ஆழித் தேருக்கு பின்னால் சண்டிகேஸ்வரர், அம்மன் தேர் இழுத்து வரப்பட்டது.

தேரோட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.ஆழித் தேராட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.மேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top