ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வந்தாலும், சித்திரை பெளர்ணமிக்கு என்று தனிப்பட்ட சிறப்பு இருக்கிறது. இந்த சித்ரா பெளர்ணமி அன்று காலையில் குளித்து முடிந்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம். மேலும் சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பது தான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.

அதாவது புழுக்கத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. இத்தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.

இந்தத் தினத்தில் அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விசேஷ அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம் பெறுகின்றது. சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

இதனிடையே தமிழகத்தில் சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், தொன்மைச் சிறப்புடையதாகவும் விளங்கும் சிவ தலம் மதுரை ஶ்ரீமீனாக்ஷி ஶ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சக்தி பீடங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது இத்தலம். பல தலங்களில் சித்ரா பெளர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும் அம்பிகையின் அருளுடன் கூடிய மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்தான் இந்த விழா சிறப்புடன் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த சித்திரைத் திருவிழா.

மேலும் அம்மனுக்கு சிறப்பு பொருந்திய இச்சித்ரா பெளர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.

ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். இதையொட்டி சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது

அது சரி.. சித்திரகுப்தன் ஏன் பாவ புண்ணிய கணக்குகளை சரி பார்க்கிறார் என்பதற்கு புராணத்தில் சொல்லப்படும் கதைகளில் ஒன்று இதோ: திருக்கயிலையில் ஒரு முறை பார்வதி தேவி ஓவியம் ஒன்றை வரைந்தார். அந்த ஒவியம் மிக அழகாக இருக்கவே பரமனிடம் அதை காண்பித்து இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுங்கள் என்று வேண்டினாள். பரமனும் ஒவியத்துக்கு உயிரூட்ட, ஒரு அழகிய ஆண்மகனாக உருவெடுத்தது அந்த ஓவியம். அவருக்கு சித்திரகுப்தர் என்று பெயர் சூட்டினார்கள். சித்திரத்திலிருந்து உயிர் பெற்றவர். ‘குப்தம்’ என்பதற்கு இரகசியம் என்ற பொருள் உண்டு. உலக உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை ரகசியமாக சரி பார்ப்பதால் இவருக்கு சித்ரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. (இதே சித்திர குப்தரின் தோன்றல் பற்றி பல கதைகள் உண்டு).

ஒரு முறை எமதர்மராஜா திருக்கயிலைக்கு வருகை தந்து பார்வதி பரமேஸ்வரரை வணங்கி, இவ்வுலகில் பிறக்கும் ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களை கணக்கிட தனக்கு உதவியாக ஒருவரை தந்தருள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். உலகிற்கு உதவும் வகையில் சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பணியை ஏற்படுத்தி கொடுக்க எண்ணிய பார்வதி - பரமேஸ்வரர் மகிழ்ந்து சித்ரகுப்தனை எமனுடன் பூவுலக ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை சரிபார்க்க அனுப்பி வைத்தனர். ஜீவராசிகளின் நல்லது கெட்டதுகளை அறிந்து அதற்கேற்ப பாவம், புண்ணியம் செய்தவர் இவர் என்று ஒவ்வொருவரை பற்றியும் எமனிடம் எடுத்துரைப்பதே இவர் பணி. சித்ரகுப்தனும் தன் பணியை சிரமேற்கொண்டு செவ்வனே செய்து வந்தார். பரமனின் அருள் பெற்ற சித்ரகுப்தனுக்கு தனிக் கோயில் ஒன்று உள்ளது. எங்கே என்று கேட்கிறீர்களா? வாருங்கள் திருக்காஞ்சிக்கு.

திருக்காஞ்சி, காஞ்சிபுரம், கஞ்சிவரம், காஞ்சியூர், கச்சி உட்பட பல பெயர்களால் அழைக்கப்படும் காஞ்சிபுரத்தின் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் நெல்லுக்காரத் தெரு வில் அமையப் பெற்றுள்ளது சித்ரகுப்தனார் கோயில். இத்திருக்கோயிலில் சித்ரகுபதர் தனி சந்நிதியில், ஒரு காலை மடித்தும் மறு காலை தொங்க விட்டும், கைகளில் ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஓலைச்சுவடியுடனும் தரிசனம் தருகிறார். நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களில் ஒன்றான கேது மோட்சகாரகன் என்று அழைக்கப்படுவார். கேதுவின் அதிதேவதை சித்ரகுப்தன் ஆவார். கேதுவிற்கான பரிகாரத் தலமாக இத்தலம் அமைந்துள்ளது. கேது–ராகு தோஷம் உள்ளவர்கள் இத்தலத்துக்கு வருகை தந்து கேதுவிற்கு உரிய தானியமான கொள்ளு மற்றும் ராகுவிற்கான உளுந்து ஆகியவற்றை சித்ரகுப்தருக்குப் படைத்து பிறகு அவற்றை பசுவிற்கு உணவாக அளிப்பதால் கேதுவின் தோஷத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

முன்னரே குறிப்பிட்ட மாதிரி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமிதான் சித்ரகுப்தருக்கு திருவிழா நடத்தப்படும். சித்ரகுப்தனின் மனைவி கர்ணகி. இவர்களுக்கு திருமணம் நடந்ததும் சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான் என்று சொல்லப்படுகிறது. சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்த விரதம் இருப்பவர்கள் பகலில் வினைகள் தீர்க்கும் விநாயகரை முதலில் வணங்கி (விரதம் நல்ல முறையில் அனுஷ்டிக்க) உப்பு சேர்க்காத உணவு உண்டு மாலை வேளையில் பெளர்ணமி நிலவு வானில் வந்ததும் தரிசித்து சித்ரகுப்த பூஜை செய்ய வேண்டும். பூஜையில் வைக்கும் பிரசாதங்களுடன் முடிந்த அளவில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது.

அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோயில்
எண்-74, நெல்லுக்காரத் தெரு,
காஞ்சிபுரம் – 631 502.
ஆலயம் திறந்திருக்கும் நேரம் : காலை 7 முதல் 12, மாலை 4 முதல் 8.30 மணி வரை.
தொலைபேசித் தொடர்புக்கு : 044-2723 0571,

சித்ரகுப்தரை வழிபட ஸ்தோத்திரம்:

யமாய தர்மராஜாய ம்ருத்யவேச அந்தகாயச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச
ஒளமதும்பராய தத்னா ய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்த காயத்ரி:
ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் ப்ரச்சோதயாத்வ்

இவ்வளவு சிறப்புகள் கூடிய தினமான சித்ரா பெள்ர்ணமி அன்று நாமும் இறைவனை வழிபட்டு சகல செளபாக்கியங்களையும் பெறுவோம்.

-வெங்கட் கிரிமேலும் சில செய்திகள்

இப்போது விற்பனையில்

மாதமிருமுறை 15-ஜூலை-2017

மேலும்

பிற இதழ்கள்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top